Wednesday, August 12, 2020

Monday, February 20, 2012

ஒரு வீர வாள் உருவான கதை


சில வாரங்களுக்கு முன்பு மிரா படிக்கும் தமிழ் பள்ளியில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மிராவுக்கு ஏனோ தெரியவில்லை, Dance ஆடுவது பிடிக்கவில்லை. அதுவும் இல்லாமல் கொஞ்சம் மேடை பயமும் கூட. இருந்தாலும், அவள் ஏதாவது செய்தால் தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் நம்பிக்கை வரும் என்பதால், அவளுக்கு மாறுவேடம் மாதிரி போட்டு ஏதாவது செய்யலாம்ன்னு முடிவு செய்தோம். என்ன செய்யலாம்ன்னு பாத்து கடைசியா, மைதிலி ஒரு நல்ல ஐடியா கொடுத்தாள். அவளுக்கு ஜான்சி ராணி வேடம் போட்டு, சும்மா ஒரு ரெண்டு லைன் “நான் ஜான்சி ராணி... வந்தே மாதரம்” அப்படின்னு சொல்ல வைக்கலாம்ன்னு முடிவு செய்தோம்.

ஜான்சி ராணி வேடத்துக்கு உடைகள் எல்லாம் ஓரளவு தயாராகவே இருந்தது. ஆனால் முக்கியமான விஷயமான வாள் (கத்தி) அப்புறம் கேடயம் இல்லை. சரின்னு மைதிலி இட்டிலி மூடி மேல ஜிகினா பேப்பர் ஒட்டி கேடயம் மாதிரி செஞ்சுடலாம்ன்னு முடிவு பண்ணா. அது நல்ல ஐடியாவா பட்டது. ஆனா வாள் பேப்பர்ல வெட்டி செய்யுற அளவுக்கு எனக்கு கலை ஞானம் இல்லை. எங்களோட நண்பர்கள் வட்டத்துல ராமு-ன்னு ஒருத்தங்க ரொம்ப கலை நயத்தோட எல்லாத்தையும் செய்வாங்க. அதனால, அவங்க கிட்ட உதவி கேக்கலாம்ன்னு முடிவு செஞ்சோம். அப்போ மைதிலிக்கும் ராமுவுக்கு நடந்த தொலைபேசி உரையாடல் தான் இந்த Blog-ன் தீம். இது ஏதோ கொஞ்சம் மிரா சம்பந்த பட்டதாகவும் இருப்பதால் இங்கேயே பதிவு செஞ்சுட்டேன்.

மைதிலி: ஹலோ ராமு... நான் மைதிலி பேசுறேன். எப்படி இருக்கீங்க?

ராமு: நான் நல்லா இருக்கேன் மைதிலி. அப்புறம்... மிராவோட தமிழ் பள்ளி பொங்கல் விழா நிகழ்ச்சி preparation எல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு...

மைதிலி: அட... நீங்களே கேட்டுட்டீங்க. நானும் அதை பத்தி பேசலாம்ன்னு தான் போன் செஞ்சேன்

ராமு: அப்படியா... சொல்லுங்க மைதிலி. என்ன விஷயம்?

மைதிலி: ஒன்னும் இல்ல ராமு. ஒரு வாள் தேவை படுது. நீங்க தான் அழகா செய்வீங்களே அதனால உங்க கிட்ட செஞ்சு குடுக்க சொல்லி உதவி கேக்கலாம்னு பாத்தேன்.

ராமு: அட... வாள் தானே... சூப்பரா செஞ்சுடலாம். சரி உங்களுக்கு எவ்வளவு நீளமா இருக்கனும்

மைதிலி: சும்மா 2 அடி இருந்தா போதும்.

ராமு: ரொம்ப சின்னாதா இருக்காதா... சரி சரி... செஞ்சுடறேன். அப்புறம் கொஞ்சம் வளைஞ்ச மாதிரி இருக்கனும் இல்லியா?

மைதிலி: ஆமாம்.. ஆமாம்... கொஞ்சம் வளைஞ்சு இருந்தா தான் natural-ஆக இருக்கும்.

ராமு: சரி ஒகே மைதிலி. கொஞ்சம் வளைஞ்சு இருக்கற மாதிரியே செஞ்சுடறேன்.

மைதிலி: அப்புறம்... கொஞ்சம் Shining-ஆக இருக்கற மாதிரி பாத்துக்கோங்க

ராமு: எதுக்குங்க Shining-ஆக இருக்கனும்? சரி... ஒகே என்னால முடிஞ்ச வரைக்கும் நான் Shining ஆக்க பாக்குறேன்.

மைதிலி: மிரா கைல பிடிக்கற மாதிரி இருக்கற மாதிரி செஞ்சுக்கோங்க..

ராமு: எதுக்குங்க கைல பிடிக்கனும்... சரி ஓகே ஏதாவது ஏற்பாடு செஞ்சு பிடிக்கற மாதிரி செய்யுறேன்.

மைதிலி: அப்புறம் முக்கியமா வாளை இடுப்புல வெக்கறதுக்கு ஒரு உறை மாதிரி தைச்சு அதுக்குள்ள வைச்சுட்டு அப்புறம் மிரா மேடைக்கு போன உடனே எடுத்து வெளிய காட்டி “வந்தே மாதரம்” அப்படின்னு சொன்னா இன்னும் ரொம்ப நல்லா இருக்கும்.

ராமு: (ரொம்பவும் குழம்பி போனவராய்) என்னங்க மைதிலி... எனக்கு ஒன்னுமே புரியல... எதுக்குங்க உறைக்குள்ள வைக்கனும்?... எதுக்கு இடுப்புல கட்டனும்? அதெல்லாம் விட, எல்லாருக்கும் காட்டி எதுக்கு வந்தே மாதரம்ன்னு சொல்லனும்... எனக்கு தலையே சுத்துது...

மைதிலி: இதுல என்ன ராமு குழம்பறதுக்கு இருக்கு? ஜான்சி ராணி மேடை மேல ஏறி வீரமா வாளை காட்டி “வந்தே மாதரம்” அப்ப்டின்னு தானே சொல்வாங்க...

ராமு: ஐயய்யோ... இது ஜான்சி ராணியோட வாளா? இதை முன்னாடியே சொல்லி இருக்கலாம் இல்ல? நான் நீங்க “வாள்”-ன்னு சொன்னதும்... ஏதோ குரங்கோட “வால்”-ன்னு நினைச்சுட்டேன். ஜான்சி ராணின்னு நீங்க ஆரம்பத்துலயே சொல்லாதது தான் இவ்ளோ குழப்பம் ஆகிடுச்சு மைதிலி... Really really sorry... ஆனா நல்ல வேளை இப்பவாவது சொன்னீங்களே... இல்லன்னா நான் ஒரு Monkey வால் செஞ்சு கொண்டு வந்திருப்பேன்....

மைதிலி: (பொய்யான கோபத்துடன்) என்னது... குரங்கோட வாலா? உங்களை... உங்களை... நான் நேர்ல வந்து கவனிச்சுக்கறேன்.

(இருவரும் வயிறு வலிக்க வலிக்க சிரித்து முடித்தார்கள் - இப்ப மறுபடியும் ஒருமுறை இவங்களோட Conversation-ஐ ஆரம்பத்துல இருந்து படிச்சீங்கன்னா இவங்க ரெண்டு பேரும் எப்படி புரிஞ்சுகிட்டாங்கன்னு உங்களுக்கு தெரியும்)
ஒரு வழியாய் அந்த பொங்கல் விழாவும் வந்தது. உண்மையில் ராமு அந்த வாளை ரொம்ப அழகாக செஞ்சிருந்தாங்க. எல்லாரும் பாத்த உடனே ரொம்ப அழகா இருக்குன்னு பாராட்டினாங்க. ரொம்ப ரொம்ப நன்றி ராமு. மிராவும் ஜான்சி ராணி வேடத்தில் மிகவும் அழகாக இருந்தாள்.

Wednesday, August 31, 2011

ரெட்டை சடை மெசேஜ்

போன வாரம்ன்னு நினைக்கிறேன். மைதிலி மிராவுக்கு ரெட்டை சடை போட்டுக்கொண்டு இருந்தாள். மிராவுக்கு தலை வாரிக்கொள்வது என்பது கொஞ்சம் கூட பிடிக்காத விஷயம். ஏதாவது பிரச்சனை செய்து கொண்டு தான் தலை வாரிக் கொள்வது அவளது வழக்கம்.

அப்படித்தான் அன்று ஒரு வழியாய் தலைவாரிக்கொள்ள சம்மதித்தாள். குறுக்கில் ஏதாவது யோசித்து அவளுக்கு மனம் மாறிவிடக் கூடாது என்பதால், மைதிலி என்னை ஏதாவது பேச்சு கொடுக்க சொன்னாள்.

(நானும் அப்படி தான் மெதுவாய் ஆரம்பித்தேன்)

நான்: மிரா... உன் தலை முடி இவ்வளவு நீளமா இருக்குதே. சூப்பர்டா தங்கம்.

மிரா: Thank you அப்பா.

(இந்த சாக்கில் லைட்டாக ஏதாவது மெசேஜ் சொல்லாம்ன்னு தோன்றியது)

நான்: செல்ல குட்டி... உன் தலை முடி ஏன் தெரியுமா நீளமா இருக்கு?

....
(அவளுக்கு ரொம்ப டைம் குடுக்காமல், நானே பதில் சொன்னேன்... ஏன்னா என் மெசேஜ் அவளுக்கு போகனும் இல்ல? இல்லன்னா அவள் சொல்லுறது தான் சரி என்னை ஒத்துக்கொள்ள வைப்பாள். எதுக்கு நமக்கு வம்புன்னு அவசர அவசரமாக பதில் சொன்னேன்)
....

நான்: ஏன்னா... நீ நிறைய Vegetables சாப்பிடுற இல்ல? அதனால தான் இவ்வளவு நீளமா வருது. அதுனால இன்னும் நிறைய Vegetables சாப்பிடனும்... புரியுதா?

(அவள் என்னை அப்படியே நக்கலா பாக்குறது போல இருந்தது. அவளுக்கு நம்பிக்கை வர்ற மாதிரி தெரியல... அதனால என்னை ஒப்பிட்டு (Compare) அவளுக்கு சொன்னா, அவள் நம்பிடுவாள்ன்னு இப்படி கேட்டேன்)

நான்: சரி... அப்பா முடியை பாத்தியா... ரொம்ப short-ஆக இருக்கு இல்ல? ஏன் தெரியுமா? அப்பா Vegetable சாப்பிடுறது கிடையாது இல்ல... அதுனால தான். இனிமே நான் ஒழுங்கா சாப்பிடப் போறேன்... எனக்கும் நீளமா முடி வளரப்போகுதே...

(இப்படி அவளுக்கு என்னை ரோல் மாடலாக காட்டினால், அவளுக்கு Vegetable மேல நம்பிக்கை வரும்ன்னு பாத்தேன். ஆனா அதுக்கு அவ சொன்னா...)

மிரா: ஹய்யோ டாடி... அதுனால இல்ல... நீங்க Great Clips கடையில முடி வெட்டிக்கறீங்க இல்ல? அதுனால தான் உங்க முடி Short-ஆக இருக்கு. ஹைய்யோ.. ஹயையோ... அம்மா... இது கூட அப்பாவுக்கு தெரியல. Come on dad.

நான்: அதாவது...அதாவது... ஆமாம்மா... கரக்ட்.

(வேற என்ன சொல்லுறது? - நல்ல வேளை மைதிலியும் அவளுக்கு தலை வாரி முடித்திருந்தாள். நானும் ஆளை விடு சாமின்னு Escape. இவளுக்கு இனிமே மெசேஜ் சொல்லுற வேலையே வச்சுக்க கூடாதுன்னு முடிவு செய்து விட்டு யோசித்தேன். இவளுக்கு எப்படி தெரியும்... அப்போ தான் நியாபகம் வந்தது. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி Great Clips கடையில முடி வெட்ட போன போது அவளையும் கூட கூப்பிட்டுக் கொண்டு போயிருந்தேன். அந்த சைக்கிள் கேப்புல இந்த எலி முடி வெட்டுவதை பார்த்து விட்டிருக்கிறது!!)

Thursday, August 25, 2011

ஒரு குல்பி ஐஸும் மனோகரனும்...

சென்ற வாரம் நாங்கள் அனைவரும் Canada-வில் இருக்கும் Vancouver நகருக்கு சுற்றி பார்க்கச் சென்றிருந்தோம். அப்போது அங்கே உள்ள Punjabi Market-க்கு செல்ல நேர்ந்தது. அங்கே உள்ள ஒரு கடையில் நம்ம ஊரில் புகழ் பெற்ற குல்பி ஐஸ் இருந்தது.

குல்பியை பார்த்ததும், ”அப்பா ப்ளீஸ் எனக்கு வாங்கி தாங்க” என்று நச்சரித்தாள் மிரா. எனக்கும் அதை பார்த்ததும் வாய் நம நம என்று இருந்ததால், சரி வாங்கலாம் என்று முடிவு செய்தேன். அப்போது எனக்கு கிடைத்த பல்பு தான் இந்த Blog.

மிரா: அப்பா எனக்கு இந்த Green color குல்பி வாங்கி குடுங்க... ப்ளீஸ்...

நான்: அது வேணாம் மிரா.. அதை விட சூப்பரா அங்க பாரு Stawberry குல்பி இருக்கு அதை வாங்கிக்கோ என்றேன்.

மிரா: ம்ஹும்... எனக்கு இது தான் வேணும்.

நான்: அதான் ஏன்னு சொல்லு...

மிரா: (கொஞ்சம் கூட யோசிக்காமல் சொன்னாள்) டாடி... Look. இந்த பெட்டில இருக்குற பொண்ணு பச்சை கலர் ஐஸ் தான் சாப்பிடுறா... அதுனால எனக்கு இது தான் வேணும். (இங்கே கீழே இருக்கும் படம் அங்கே உள்ள ஐஸ் பெட்டியிலும் பெரிதாக்கி போடப் பட்டு இருந்தது)



நான்: (இப்படி அவ லாஜிக் எல்லாம் சொல்லி என்னை மடக்கிட்டதால) சரி... சரி... இந்தா வாக்கிக்கோ (அப்படின்னு அவளுக்கு அவ கேட்டதையே வாங்கி கொடுத்தேன்)

மிரா: (அதை வாங்கி கையில வச்சுகிட்டு) Thank you அப்பா... I love you அப்பா... You are the best dad in the whole world...

கொஞ்ச நேரத்துல அந்த குல்பியை சாப்பிட ஆரம்பிச்சா. அவ சாப்பிடறதை பாத்து எனக்கும் ஒரு வாய் சாப்பிட்டா நல்லா இருக்கும்னு என் நாக்கு பட படத்தது. நானும், இவ தான் இப்படி பட்ட ஒரு பாசக்கார பொண்ணா இருக்காளே அதனால ஒரு வாய் காக்கா கடி கடிச்சுக்கலாம்ன்னு கேட்டேன்.

நான்: மிரா.. அப்பாவுக்கு ஒரு வாய் தாம்மா. ஒரே ஒரு கடி தான்.

(இப்ப தான் முதல் முறையா அவ யாருன்னு கொஞ்சம் தெரிய ஆரம்பிச்சது)

மிரா: ம்ஹும்.. கடிக்கல்லாம் தர மாட்டேன்... வேணும்ன்னா குல்பியை ஒரே ஒரு முறை நாக்குல டச் பண்ணிட்டு குடுத்துடனும்.

(அடிப்பாவி... இது தானா 'best dad in the world'க்கு நீ காட்டுற தாராளம்ன்னு ஜெர்க் ஆனேன். அப்பவே டீசண்டா.. சரி வேணாம்மா தங்கம், நீயே சாப்டுன்னு சொல்லிருக்கனும். இதுல ஏதோ வில்லங்கம் இருக்குன்னு என் மர மண்டைக்கு உரைச்சிருக்கனும். ஆனா குல்பியை கண்ணு பாத்துட்டதால, சரி ஒரு முறை நாக்குல டச்சாவது பண்ணிடலாம்னு முடிவு செஞ்சு அவ கிட்ட இருந்து குல்பியை வாங்கி வாய் கிட்ட கொண்டு போனேன். என் நாக்குக்கும் குல்பிக்கும் ஒரு இன்ச் தூரம் இருக்கும் போது, சடார்ன்னு என் கையை புடிச்சு Stop செஞ்சா...)

நான்: (டென்ஷனாகி) மிரா நீ தானே டேஸ்ட் பண்ண சொன்ன? இப்ப ஏன் Stop பண்ணுற?

(அப்ப சொன்னா பாருங்க ஒரு லாஜிக்கு...)

மிரா: டாடி... இந்த போட்டோல இருக்கற பொண்ணை பாருங்க... அவ அவங்க அப்பாவுக்கு Share பண்ணாம அவளே தான் எல்லா குல்பியையும் சாப்பிடுறா. அதுனால... சாரி டாடி... என்னாலயும் Share பண்ண முடியாது.



(ஆஹா... இப்படில்லாம் கூட ஏமாத்துவாய்ங்களா... வேற வழி... அந்த குல்பியை அன்பா ஒரு முறை பாத்துட்டு அப்படியே திருப்பி குடுத்துட்டேன். முதல் முறை அந்த போட்டோல இருக்குற பொண்னை காட்டி குல்பி வாங்கினா... சரின்னு விட்டேன். இப்ப மறுபடியும் அதே பொண்ணு போட்டோவை காட்டி ரெண்டாவது முறையும் எனக்கு Share பண்ணாம பல்பு குடுத்துட்டு கைக்கு எட்டினது வாய்க்கு எட்ட முடியாம பண்ணிட்டா. அதுனால நான் எனக்கே சொல்லிகிட்டேன். மனோகரா... உஷாரா இருடான்னு...)

இவ்வளவு அட்டகாசத்தையும் பண்ணிட்டு, அவ அழகா என் கிட்டருந்து வாங்கி, நான் பாத்துட்டு இருக்கறப்பவே நல்லா கும்மு கும்னுன்னு குல்பியை உள்ள தள்ளிட்டு ஒன்னுமே நடக்காத மாதிரி என்னை பாத்தா... எனக்கு வந்துச்சே ஒரு வேகம். நீ என்னடி எனக்கு Share பண்ணுறதுன்னு நானே போய் இன்னொரு குல்பி வாங்கிக்கறேன்னு வாங்கிட்டு வந்து சாப்பிட உக்கார்ந்தேன். மறுபடியும் என் வாய்க்கும் குல்பிக்கும் ஒரு இன்ச் தூரம் இருக்கும் போது என் கையை புடிச்சா.

நான்: மிரா... இது என்னோட குல்பி... நீ தான் சாப்டுட்ட இல்ல?

மிரா: நோ டாடி... Share பண்ணி சாப்பிட்டா தான் நீங்க Good boy. அதுனால எனக்கு share பண்ணுங்க.

(உடனே நான் யோசிச்சேன்... நீ மட்டும் தான் அந்த குல்பி சாப்பிடுற பொண்ணு இருக்குற படத்தை பாத்து எனக்கு பல்பு குடுப்பியா, இதோ நானும் உன் பல்பையே உனக்கு திருப்பி குடுக்கறேன்னு என் மனசுக்குள்ள நினைச்சுட்டு...)

நான்: மிரா... இந்த போட்டோல இருக்குற பொண்ணு அவங்க அப்பாவுக்கு தரல இல்ல, அதுனால நானும் தர மாட்டேன்.

(எப்புடி மடக்கிட்டோம்ல்ல அப்படின்னு நினைச்சேன். ஆனா அதுக்கும் அவ அசராம ஒரு பதில் சொன்னா பாருங்க... அப்படியே ஆடி போய்ட்டேன். அப்ப தான் தெரிஞ்சுது அவ எவ்வளவு பெரிய தில்லாலங்கடின்னு)

மிரா: ஐயோ டாடி... இந்த போட்டோல இருக்குற பொண்ணு சாப்பிடுற குல்பி, அவங்க அப்பா அவ கிட்ட Share பண்ண குடுத்தது. நல்லா பாருங்க... அவங்க அப்பா போட்டோவுக்கு அந்த பக்கமா நிக்குறார். (அதுல அப்பாவும் இல்ல ஒரு ஆட்டு குட்டியும் இல்ல... எல்லாம் உடான்ஸு)



(இதை சொல்லிட்டு என் பதிலுக்கெல்லாம் வெயிட் பண்ணாம நல்லா குல்பியை ஒரு கடி கடிச்சு குடுத்துட்டு அவ பாட்டுக்கும் ஒண்ணுமே நடக்காத மாதிரி என்னை பாத்து அவளோட கடைசி பன்ச் டயலாக்கை சொன்னா)

மிரா: You are the best dad in the whole world. I love you so much.

இது தாங்க ஒரு குல்பியின் கதை.

பின் குறிப்பு:
இதை படிப்பவர்கள் தயவு செய்து மிரா யாருக்கும் Share பண்ண மாட்டாள் என்று நினைக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன். அவளை பார்க்கும் விதத்தில் பார்த்தாளே, அவளுக்கு தெரியும் நான் என்ன நினைக்கிறேன் என்று. எங்கேல்லாம் Share செய்யனுமோ அங்கே அழகாய் Share செய்ய முயற்ச்சி செய்வாள். நம்ம அப்பா தானே என்ற அன்பும் உரிமையும் தான் அவள் இப்படி விளையாடியதற்க்கு காரணம். Yes. She is the best daughter in the whole world.

குழந்தைகள் சில நேரங்களில் செய்யும் செயல்களும் சொல்லும் சொற்களும் நமக்கு ஆச்சரியங்களை அளிக்கக் கூடியவை. இன்னும் நிறைய நிறைய ஆச்சரியங்களையும் அனுபவங்களையும் அவளிடம் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

Monday, May 2, 2011

தூக்கம் வருது... ஆனா வரல...

ஒவ்வொரு நாள் இரவும் மிராவை தூங்க வைப்பது என்பது எங்கள் வீட்டில் ஒரு ஜாலியான நிகழ்ச்சி. கதையும் பாட்டுகளும் நிறைந்த கதம்பமாய் அவை இருக்கும். ஒரே விஷயம் சொன்னால் அவளுக்கு ரொம்ப போர் அடித்து விடும் என்பதால், கொஞ்ச நாளைக்கு ஒரு முறை புதிதாய் ஏதாவது செய்ய வேண்டி இருக்கும். சில நேரங்களில் நானே என் சொந்த பாட்டையும் சொந்த கதையையும் உருவாக்க வேண்டிய கொடுமையும் நடந்தது.

நிறைய நான் மறந்து விட்டேன் இருந்தாலும் உங்களை இம்சை படுத்த இதோ ஓரிரு நினைவில் நிற்கும் எங்கள் சொந்த Sleep Time பாட்டுகள். நான் ஒரு வரி பாடினால் மிரா ஒரு வரி என்று போய் ஒரு வழியாய் பாடி மிராவுக்கு தூக்கம் வந்துடும். ஒரு நாள் இரவு தற்செயலாக உருவான பாடல் இது.

குட்டி பொண்ணு செல்ல பொண்ணு ஊருக்கு போனாளாம்
ஊருக்கு போயி ஊருக்கு போயி முறுக்கு திண்ணாளாம்
முறுக்கு திண்னு முறுக்கு தின்னு தாகம் ஆச்சுதாம்
தாகமாகி தாகமாகி தண்ணி குடுச்சாளாம்
தாத்தா கூட தாத்தா கூட பீச்சுக்கு போனாளாம்
பீச்சுக்கு போயி பீச்சுக்கு போயி மண்ணுல குதிச்சாளாம்
மண்ணுல குதிச்ச்சு குதிச்சு ஆட்டம் போட்டாளாம்
ஆட்டம் போட்டு ஆட்டம் போட்டு தூக்கம் வந்திடுச்சாம்
தூக்கம் வந்து தூக்கம் வந்து தூங்கி போனாளாம்…
தூக்கம் வந்து தூக்கம் வந்து தூங்கி போனாளாம்…


இப்படி இந்த பாட்டு போய் கொண்டே இருக்கும். ஒரு சில நாட்கள், கொஞ்ச நேரத்துல இந்த பாட்டை கேக்கறதை விட தூங்கியே போகலாம்ன்னு தூங்கிடுவா. இன்னும் சில நாள்ள, இவனை இப்படியே விடக் கூடாது விட்டா பாடியே நம்மளை இம்சை பண்ணிடுவான் அதுனால, இதுக்கு ஒரு முடிவு கட்டியாகனும்ன்னு, இந்த பாட்டை முடிக்கறதுக்குள்ளயே, சரமாதிரியா என் கிட்ட பாயிண்ட் பாயிண்டா இப்படி கேப்பா.

• அப்பா எதுக்காக அவ ஊருக்கு போனா?
• எதுக்காக முறுக்கு திண்ணா, பிஸ்கட் கிடைக்கலியா?
• தாத்தாகூட எதுக்கு போனா, பாட்டி வரலயா?
• பீச்சுக்கு போறப்போ Giraffe (ஒட்டகசிவிங்கியும்) கூட வந்துச்சா? (திடீர்னு எப்படி Girrafe இதுல வந்ததுன்னு ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்)


இப்படி 100 எடத்துல நிறுத்தி கேள்வி கேட்டு, நானா நிறுத்தற வரைக்கும் என்னை விடாம தொந்தரவு பண்ணி அப்படி வாடா அப்பா வழிக்குன்னு என்னை கொண்டு வர பாப்பா.

ஆனா நம்ம விட்டுடுவோமா? ம்ஹும். எவ்வளவோ பாத்தாச்சு, இதை பாக்க மாட்டோமா? சரி எதுக்கு சொந்த பாட்டு பாடனும், நல்ல பாட்டு பாடி இந்த பொண்னோட பக்தியை வளக்கலாம்ன்னு, அடுத்து அருணகிரிநாதர் எழுதிய அழகான பாடலான கந்தர் அனுபூதில இருந்து ஒரு சாமி பாட்டை எடுத்து விடுவேன். அந்த ஒரிஜினல் பாடகர் இப்படி தான் ஆரம்பிச்சு இருப்பார். அதே ராகத்துல நானும் சின்சியரா பத்தி பழமா ஆரம்பிப்பேன்.

முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்


பாட்டு ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலயே நோ டாடி எனக்கு இந்த பாட்டு புடிக்கல புடிக்கல நிறுத்துன்னு தியேட்டர்ல விசிலடிக்காத குறையா அலப்பறை பண்ணி என்னை நிறுத்த வைப்பா..

இப்படி பண்ணா? நாம விட்டுடுவோமா? நான் உடனே அடுத்த ஸ்டெப்புல இறங்குவேன். இந்த ஒரிஜினல் பாட்டு தான உனக்கு பிடிக்கல, இந்தா வெச்சுக்கோ டுபாக்கூர் பாட்டுன்னு, ஒரிஜினல் ரைட்டர் திரு அருணகிரிநாதர் கிட்ட மானசீகமா மன்னிப்பு கேட்டுட்டு, முருகா கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கப்பான்னு சொல்லிட்டு அதே பாட்டை ரீமிக்ஸில் பக்தி + Action கலந்து ஆரம்பிப்பேன். அதாவது, கொஞ்சம் பக்தியும் இருக்கணும், மிராவுக்கு ரொம்ப பழக்கமான விளையாட்டு விஷயங்களும் இருக்கனும். அது கிட்டத்தட்ட இப்படி தான் இருக்கும். (என்னைக்கு முருகன் வந்து என் கண்ணை இல்ல இல்ல நாக்கை வேலால குத்த போறான்னு தெரியல)

முருகா முருகா Playing முருகா
முருகா முருகா Jumping முருகா
முருகா முருகா Swimming முருகா
முருகா முருகா Running முருகா
முருகா முருகா Reading முருகா
முருகா முருகா Writing முருகா
முருகா முருகா Eating முருகா
முருகா முருகா Sleeping முருகா
முருகா முருகா Swing-ல விளையாடனும்
முருகா முருகா Sand-ல விளையாடனும்
முருகா முருகா Slide-ல விளையாடனும்
முருகா முருகா Park-ல விளையாடனும்
முருகா முருகா Pink color Chocolate குடு முருகா
முருகா முருகா Princess Toy குடு முருகா
முருகா முருகா Dora Sticker குடு முருகா
முருகா முருகா Books குடு முருகா


அப்படியே நைசாக அவ தூங்கிட்டாளான்னு பாக்கறதுக்காக, இந்த பாட்டுல இருந்து கொஞ்சம் Action எடுத்துட்டு, பக்தி மட்டும் இருக்கற மாதிரி ஒரு Remix ஆரம்பிப்பேன். அப்படியாவது அவளுக்குள்ள கொஞ்சம் பத்தி போகட்டும்னு. உண்மையிலேயே தூங்கிட்டான்னா அப்படியே விட்டுடுவா. இல்லாட்டி நான் மறுபடியும் முருகனை Action பண்ண வைக்கனும்.

முருகா முருகா அருள்வாய் முருகா
முருகா முருகா வரம் தா முருகா
முருகா முருகா என்னை நீ காப்பாய்
முருகா முருகா எதிலும் இருப்பாய்
முருகா முருகா என்னுள் இருப்பாய்


அதைவிட கொடுமை என்னன்னா, இதை பாடும் போது, ஏதோ அசதில எப்பவாவது குறுக்குல ஒரு ஸ்டேன்ஸா மறந்து விட்டுட்டு பாடிடுவேன். உடனே ஆரம்பிச்சுடுவா… அப்பா நீ “Swing” சொல்லாம விட்டுட்ட, நீ “Slide” சொல்லல, நீ “Chocolate” ரெண்டு முறை தப்பா சொல்லிட்டன்னு Statistics புட்டு புட்டு வைப்பா. இவ்வளவு தெளிவா கவனிக்கற பொண்ணு தூங்கவாங்க போகுது? உடனே எனக்கு டரியல் ஆகிடும். ஆகா… இன்னும் ஒரு 1 hour ஓடாம வண்டி நிக்காது போல இருக்கேன்னு.

ஒரு சில நாள்ல இப்படி செஞ்சும் தூங்க மாட்டா. அப்பல்லாம் இன்னொரு பாட்டு உருவாக்கி பாடி அவளை தூங்க வைக்க பாப்பேன். (அதுல கொஞ்சம் self confidence boost பண்ணுற மாதிரியும் ஒரு சொந்த பாட்டு தயாரிச்சு பாடுறதும் உண்டு. இந்த பாட்டு பாடி பாடி, ஒரு சில நேரங்கள்ல மிராவே என் கிட்ட “அப்பா. I’m Storng பாட்டு பாடுன்னு கேக்கறதும் உண்டு. இதுக்கு நாங்களே ஒரு ராகமும் போட்டு கிட்டோம்)

I’m strong…. You are strong… we are all strong
I’m brave… you are brave… we are all brave
I speak truth… you speak truth… we all speak truth
I share with you… you share with me… we all share
I do good things… you do good things… we all do good things
I am happy… you are happy… we are all happy
Life is beautiful… Life is beautiful.


இப்படி இது போய் கிட்டே இருக்கும். ஒரு வழியா மிரா தூங்கிடுவா. இதெல்லாம் அவளோட sub-concious mind-க்கு உள்ள போகும்ன்னு ஒரு நம்பிக்கை அவ்வளவு தான்.








Tuesday, March 8, 2011

Giraffe's Milk (ஒட்டகசிவிங்கி பால்)



இன்று காலை மிராவோடு காரில் ஸ்கூலுக்கு போகும் போது எனக்கு கிடைத்த பல்பு.

நான்: (ரொம்ப புத்திசாலியாக) மிராம்மா... நீ இன்னைக்கு காலைல பால் குடிச்ச இல்ல? அது எங்க இருந்து வருதுன்னு தெரியுமா?

மிரா: இல்ல டாடி...

நான்: ஹும்ம்... அது (Cow) பசுமாடு கிட்ட இருந்து வருதுடா தங்கம். புரியுதா?

மிரா: டாடி.... டாடி...

நான்: என்னடா செல்லம்?

மிரா: அப்படின்னா Girrafe (ஒட்டகசிவிங்கி) பால் குடுக்காதா?

(என்னா அட்டகாசம்... இப்படியெல்லாமா யோசிக்கறது?)

நான்: குடுக்கும்மா. ஆனா ஓட்டகசிவிங்கி உயரமா இருக்கும் இல்ல? அதுனால நம்மளால பால் கறக்க முடியாது. அதனால தான் Cow கிட்ட இருந்து எடுத்துக்கறோம். (எப்புடி சாமாளிச்சோம்ல்ல...)

மிரா: ஹும்... அப்படின்னா Girrafeயோட குட்டி சின்னதா தானே இருக்கும். அது கிட்ட இருந்து வாங்கிக்கலாமா?

நான்: ஹி...ஹி....ஹி.... அது.. அது... அதாவது... கரக்ட் தான். ஆனா ஸ்கூல் வந்துடுச்சும்மா. அப்பா அப்புறமா பதில் சொல்லுறேன்... ஓகேவா?

(அப்பாடா தப்பிச்சேன்டா சாமி - இனிமேல் பதில் சொல்லும் போது பாத்து யோசிச்சு சொல்லனும்ன்னு முடிவு பண்ணிட்டேன்)








முதல் பக்கம்

இது மிராவுக்கும் எனக்கும் நடந்த சுவையான உரையாடல்களின் ஒரு தொகுப்பு, எனக்கு சில நேரங்களில் ஆச்சரியங்களை அளித்த அவளது செயல்கள், ஒரு குழந்தை எப்படியெல்லாம் யோசிக்க முடியும் என உணர்த்திய தருணங்கள் ஆகியவற்றின் சில கிறுக்கல்கள். முக்கியமாக, என்றாவது ஒரு நாள் மிரா என்னிடம் “அப்பா நான் சின்ன பெண்ணா இருக்கும் போது என்னப்பா செய்தேன்” என்று கேட்கும் போது, அவளுக்கு காட்ட எனது நினைவு குறிப்புகள்...

மனோ
3rd March 2011
02:18:10 PM