Wednesday, August 31, 2011

ரெட்டை சடை மெசேஜ்

போன வாரம்ன்னு நினைக்கிறேன். மைதிலி மிராவுக்கு ரெட்டை சடை போட்டுக்கொண்டு இருந்தாள். மிராவுக்கு தலை வாரிக்கொள்வது என்பது கொஞ்சம் கூட பிடிக்காத விஷயம். ஏதாவது பிரச்சனை செய்து கொண்டு தான் தலை வாரிக் கொள்வது அவளது வழக்கம்.

அப்படித்தான் அன்று ஒரு வழியாய் தலைவாரிக்கொள்ள சம்மதித்தாள். குறுக்கில் ஏதாவது யோசித்து அவளுக்கு மனம் மாறிவிடக் கூடாது என்பதால், மைதிலி என்னை ஏதாவது பேச்சு கொடுக்க சொன்னாள்.

(நானும் அப்படி தான் மெதுவாய் ஆரம்பித்தேன்)

நான்: மிரா... உன் தலை முடி இவ்வளவு நீளமா இருக்குதே. சூப்பர்டா தங்கம்.

மிரா: Thank you அப்பா.

(இந்த சாக்கில் லைட்டாக ஏதாவது மெசேஜ் சொல்லாம்ன்னு தோன்றியது)

நான்: செல்ல குட்டி... உன் தலை முடி ஏன் தெரியுமா நீளமா இருக்கு?

....
(அவளுக்கு ரொம்ப டைம் குடுக்காமல், நானே பதில் சொன்னேன்... ஏன்னா என் மெசேஜ் அவளுக்கு போகனும் இல்ல? இல்லன்னா அவள் சொல்லுறது தான் சரி என்னை ஒத்துக்கொள்ள வைப்பாள். எதுக்கு நமக்கு வம்புன்னு அவசர அவசரமாக பதில் சொன்னேன்)
....

நான்: ஏன்னா... நீ நிறைய Vegetables சாப்பிடுற இல்ல? அதனால தான் இவ்வளவு நீளமா வருது. அதுனால இன்னும் நிறைய Vegetables சாப்பிடனும்... புரியுதா?

(அவள் என்னை அப்படியே நக்கலா பாக்குறது போல இருந்தது. அவளுக்கு நம்பிக்கை வர்ற மாதிரி தெரியல... அதனால என்னை ஒப்பிட்டு (Compare) அவளுக்கு சொன்னா, அவள் நம்பிடுவாள்ன்னு இப்படி கேட்டேன்)

நான்: சரி... அப்பா முடியை பாத்தியா... ரொம்ப short-ஆக இருக்கு இல்ல? ஏன் தெரியுமா? அப்பா Vegetable சாப்பிடுறது கிடையாது இல்ல... அதுனால தான். இனிமே நான் ஒழுங்கா சாப்பிடப் போறேன்... எனக்கும் நீளமா முடி வளரப்போகுதே...

(இப்படி அவளுக்கு என்னை ரோல் மாடலாக காட்டினால், அவளுக்கு Vegetable மேல நம்பிக்கை வரும்ன்னு பாத்தேன். ஆனா அதுக்கு அவ சொன்னா...)

மிரா: ஹய்யோ டாடி... அதுனால இல்ல... நீங்க Great Clips கடையில முடி வெட்டிக்கறீங்க இல்ல? அதுனால தான் உங்க முடி Short-ஆக இருக்கு. ஹைய்யோ.. ஹயையோ... அம்மா... இது கூட அப்பாவுக்கு தெரியல. Come on dad.

நான்: அதாவது...அதாவது... ஆமாம்மா... கரக்ட்.

(வேற என்ன சொல்லுறது? - நல்ல வேளை மைதிலியும் அவளுக்கு தலை வாரி முடித்திருந்தாள். நானும் ஆளை விடு சாமின்னு Escape. இவளுக்கு இனிமே மெசேஜ் சொல்லுற வேலையே வச்சுக்க கூடாதுன்னு முடிவு செய்து விட்டு யோசித்தேன். இவளுக்கு எப்படி தெரியும்... அப்போ தான் நியாபகம் வந்தது. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி Great Clips கடையில முடி வெட்ட போன போது அவளையும் கூட கூப்பிட்டுக் கொண்டு போயிருந்தேன். அந்த சைக்கிள் கேப்புல இந்த எலி முடி வெட்டுவதை பார்த்து விட்டிருக்கிறது!!)

Thursday, August 25, 2011

ஒரு குல்பி ஐஸும் மனோகரனும்...

சென்ற வாரம் நாங்கள் அனைவரும் Canada-வில் இருக்கும் Vancouver நகருக்கு சுற்றி பார்க்கச் சென்றிருந்தோம். அப்போது அங்கே உள்ள Punjabi Market-க்கு செல்ல நேர்ந்தது. அங்கே உள்ள ஒரு கடையில் நம்ம ஊரில் புகழ் பெற்ற குல்பி ஐஸ் இருந்தது.

குல்பியை பார்த்ததும், ”அப்பா ப்ளீஸ் எனக்கு வாங்கி தாங்க” என்று நச்சரித்தாள் மிரா. எனக்கும் அதை பார்த்ததும் வாய் நம நம என்று இருந்ததால், சரி வாங்கலாம் என்று முடிவு செய்தேன். அப்போது எனக்கு கிடைத்த பல்பு தான் இந்த Blog.

மிரா: அப்பா எனக்கு இந்த Green color குல்பி வாங்கி குடுங்க... ப்ளீஸ்...

நான்: அது வேணாம் மிரா.. அதை விட சூப்பரா அங்க பாரு Stawberry குல்பி இருக்கு அதை வாங்கிக்கோ என்றேன்.

மிரா: ம்ஹும்... எனக்கு இது தான் வேணும்.

நான்: அதான் ஏன்னு சொல்லு...

மிரா: (கொஞ்சம் கூட யோசிக்காமல் சொன்னாள்) டாடி... Look. இந்த பெட்டில இருக்குற பொண்ணு பச்சை கலர் ஐஸ் தான் சாப்பிடுறா... அதுனால எனக்கு இது தான் வேணும். (இங்கே கீழே இருக்கும் படம் அங்கே உள்ள ஐஸ் பெட்டியிலும் பெரிதாக்கி போடப் பட்டு இருந்தது)



நான்: (இப்படி அவ லாஜிக் எல்லாம் சொல்லி என்னை மடக்கிட்டதால) சரி... சரி... இந்தா வாக்கிக்கோ (அப்படின்னு அவளுக்கு அவ கேட்டதையே வாங்கி கொடுத்தேன்)

மிரா: (அதை வாங்கி கையில வச்சுகிட்டு) Thank you அப்பா... I love you அப்பா... You are the best dad in the whole world...

கொஞ்ச நேரத்துல அந்த குல்பியை சாப்பிட ஆரம்பிச்சா. அவ சாப்பிடறதை பாத்து எனக்கும் ஒரு வாய் சாப்பிட்டா நல்லா இருக்கும்னு என் நாக்கு பட படத்தது. நானும், இவ தான் இப்படி பட்ட ஒரு பாசக்கார பொண்ணா இருக்காளே அதனால ஒரு வாய் காக்கா கடி கடிச்சுக்கலாம்ன்னு கேட்டேன்.

நான்: மிரா.. அப்பாவுக்கு ஒரு வாய் தாம்மா. ஒரே ஒரு கடி தான்.

(இப்ப தான் முதல் முறையா அவ யாருன்னு கொஞ்சம் தெரிய ஆரம்பிச்சது)

மிரா: ம்ஹும்.. கடிக்கல்லாம் தர மாட்டேன்... வேணும்ன்னா குல்பியை ஒரே ஒரு முறை நாக்குல டச் பண்ணிட்டு குடுத்துடனும்.

(அடிப்பாவி... இது தானா 'best dad in the world'க்கு நீ காட்டுற தாராளம்ன்னு ஜெர்க் ஆனேன். அப்பவே டீசண்டா.. சரி வேணாம்மா தங்கம், நீயே சாப்டுன்னு சொல்லிருக்கனும். இதுல ஏதோ வில்லங்கம் இருக்குன்னு என் மர மண்டைக்கு உரைச்சிருக்கனும். ஆனா குல்பியை கண்ணு பாத்துட்டதால, சரி ஒரு முறை நாக்குல டச்சாவது பண்ணிடலாம்னு முடிவு செஞ்சு அவ கிட்ட இருந்து குல்பியை வாங்கி வாய் கிட்ட கொண்டு போனேன். என் நாக்குக்கும் குல்பிக்கும் ஒரு இன்ச் தூரம் இருக்கும் போது, சடார்ன்னு என் கையை புடிச்சு Stop செஞ்சா...)

நான்: (டென்ஷனாகி) மிரா நீ தானே டேஸ்ட் பண்ண சொன்ன? இப்ப ஏன் Stop பண்ணுற?

(அப்ப சொன்னா பாருங்க ஒரு லாஜிக்கு...)

மிரா: டாடி... இந்த போட்டோல இருக்கற பொண்ணை பாருங்க... அவ அவங்க அப்பாவுக்கு Share பண்ணாம அவளே தான் எல்லா குல்பியையும் சாப்பிடுறா. அதுனால... சாரி டாடி... என்னாலயும் Share பண்ண முடியாது.



(ஆஹா... இப்படில்லாம் கூட ஏமாத்துவாய்ங்களா... வேற வழி... அந்த குல்பியை அன்பா ஒரு முறை பாத்துட்டு அப்படியே திருப்பி குடுத்துட்டேன். முதல் முறை அந்த போட்டோல இருக்குற பொண்னை காட்டி குல்பி வாங்கினா... சரின்னு விட்டேன். இப்ப மறுபடியும் அதே பொண்ணு போட்டோவை காட்டி ரெண்டாவது முறையும் எனக்கு Share பண்ணாம பல்பு குடுத்துட்டு கைக்கு எட்டினது வாய்க்கு எட்ட முடியாம பண்ணிட்டா. அதுனால நான் எனக்கே சொல்லிகிட்டேன். மனோகரா... உஷாரா இருடான்னு...)

இவ்வளவு அட்டகாசத்தையும் பண்ணிட்டு, அவ அழகா என் கிட்டருந்து வாங்கி, நான் பாத்துட்டு இருக்கறப்பவே நல்லா கும்மு கும்னுன்னு குல்பியை உள்ள தள்ளிட்டு ஒன்னுமே நடக்காத மாதிரி என்னை பாத்தா... எனக்கு வந்துச்சே ஒரு வேகம். நீ என்னடி எனக்கு Share பண்ணுறதுன்னு நானே போய் இன்னொரு குல்பி வாங்கிக்கறேன்னு வாங்கிட்டு வந்து சாப்பிட உக்கார்ந்தேன். மறுபடியும் என் வாய்க்கும் குல்பிக்கும் ஒரு இன்ச் தூரம் இருக்கும் போது என் கையை புடிச்சா.

நான்: மிரா... இது என்னோட குல்பி... நீ தான் சாப்டுட்ட இல்ல?

மிரா: நோ டாடி... Share பண்ணி சாப்பிட்டா தான் நீங்க Good boy. அதுனால எனக்கு share பண்ணுங்க.

(உடனே நான் யோசிச்சேன்... நீ மட்டும் தான் அந்த குல்பி சாப்பிடுற பொண்ணு இருக்குற படத்தை பாத்து எனக்கு பல்பு குடுப்பியா, இதோ நானும் உன் பல்பையே உனக்கு திருப்பி குடுக்கறேன்னு என் மனசுக்குள்ள நினைச்சுட்டு...)

நான்: மிரா... இந்த போட்டோல இருக்குற பொண்ணு அவங்க அப்பாவுக்கு தரல இல்ல, அதுனால நானும் தர மாட்டேன்.

(எப்புடி மடக்கிட்டோம்ல்ல அப்படின்னு நினைச்சேன். ஆனா அதுக்கும் அவ அசராம ஒரு பதில் சொன்னா பாருங்க... அப்படியே ஆடி போய்ட்டேன். அப்ப தான் தெரிஞ்சுது அவ எவ்வளவு பெரிய தில்லாலங்கடின்னு)

மிரா: ஐயோ டாடி... இந்த போட்டோல இருக்குற பொண்ணு சாப்பிடுற குல்பி, அவங்க அப்பா அவ கிட்ட Share பண்ண குடுத்தது. நல்லா பாருங்க... அவங்க அப்பா போட்டோவுக்கு அந்த பக்கமா நிக்குறார். (அதுல அப்பாவும் இல்ல ஒரு ஆட்டு குட்டியும் இல்ல... எல்லாம் உடான்ஸு)



(இதை சொல்லிட்டு என் பதிலுக்கெல்லாம் வெயிட் பண்ணாம நல்லா குல்பியை ஒரு கடி கடிச்சு குடுத்துட்டு அவ பாட்டுக்கும் ஒண்ணுமே நடக்காத மாதிரி என்னை பாத்து அவளோட கடைசி பன்ச் டயலாக்கை சொன்னா)

மிரா: You are the best dad in the whole world. I love you so much.

இது தாங்க ஒரு குல்பியின் கதை.

பின் குறிப்பு:
இதை படிப்பவர்கள் தயவு செய்து மிரா யாருக்கும் Share பண்ண மாட்டாள் என்று நினைக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன். அவளை பார்க்கும் விதத்தில் பார்த்தாளே, அவளுக்கு தெரியும் நான் என்ன நினைக்கிறேன் என்று. எங்கேல்லாம் Share செய்யனுமோ அங்கே அழகாய் Share செய்ய முயற்ச்சி செய்வாள். நம்ம அப்பா தானே என்ற அன்பும் உரிமையும் தான் அவள் இப்படி விளையாடியதற்க்கு காரணம். Yes. She is the best daughter in the whole world.

குழந்தைகள் சில நேரங்களில் செய்யும் செயல்களும் சொல்லும் சொற்களும் நமக்கு ஆச்சரியங்களை அளிக்கக் கூடியவை. இன்னும் நிறைய நிறைய ஆச்சரியங்களையும் அனுபவங்களையும் அவளிடம் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.