Monday, February 20, 2012

ஒரு வீர வாள் உருவான கதை


சில வாரங்களுக்கு முன்பு மிரா படிக்கும் தமிழ் பள்ளியில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மிராவுக்கு ஏனோ தெரியவில்லை, Dance ஆடுவது பிடிக்கவில்லை. அதுவும் இல்லாமல் கொஞ்சம் மேடை பயமும் கூட. இருந்தாலும், அவள் ஏதாவது செய்தால் தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் நம்பிக்கை வரும் என்பதால், அவளுக்கு மாறுவேடம் மாதிரி போட்டு ஏதாவது செய்யலாம்ன்னு முடிவு செய்தோம். என்ன செய்யலாம்ன்னு பாத்து கடைசியா, மைதிலி ஒரு நல்ல ஐடியா கொடுத்தாள். அவளுக்கு ஜான்சி ராணி வேடம் போட்டு, சும்மா ஒரு ரெண்டு லைன் “நான் ஜான்சி ராணி... வந்தே மாதரம்” அப்படின்னு சொல்ல வைக்கலாம்ன்னு முடிவு செய்தோம்.

ஜான்சி ராணி வேடத்துக்கு உடைகள் எல்லாம் ஓரளவு தயாராகவே இருந்தது. ஆனால் முக்கியமான விஷயமான வாள் (கத்தி) அப்புறம் கேடயம் இல்லை. சரின்னு மைதிலி இட்டிலி மூடி மேல ஜிகினா பேப்பர் ஒட்டி கேடயம் மாதிரி செஞ்சுடலாம்ன்னு முடிவு பண்ணா. அது நல்ல ஐடியாவா பட்டது. ஆனா வாள் பேப்பர்ல வெட்டி செய்யுற அளவுக்கு எனக்கு கலை ஞானம் இல்லை. எங்களோட நண்பர்கள் வட்டத்துல ராமு-ன்னு ஒருத்தங்க ரொம்ப கலை நயத்தோட எல்லாத்தையும் செய்வாங்க. அதனால, அவங்க கிட்ட உதவி கேக்கலாம்ன்னு முடிவு செஞ்சோம். அப்போ மைதிலிக்கும் ராமுவுக்கு நடந்த தொலைபேசி உரையாடல் தான் இந்த Blog-ன் தீம். இது ஏதோ கொஞ்சம் மிரா சம்பந்த பட்டதாகவும் இருப்பதால் இங்கேயே பதிவு செஞ்சுட்டேன்.

மைதிலி: ஹலோ ராமு... நான் மைதிலி பேசுறேன். எப்படி இருக்கீங்க?

ராமு: நான் நல்லா இருக்கேன் மைதிலி. அப்புறம்... மிராவோட தமிழ் பள்ளி பொங்கல் விழா நிகழ்ச்சி preparation எல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு...

மைதிலி: அட... நீங்களே கேட்டுட்டீங்க. நானும் அதை பத்தி பேசலாம்ன்னு தான் போன் செஞ்சேன்

ராமு: அப்படியா... சொல்லுங்க மைதிலி. என்ன விஷயம்?

மைதிலி: ஒன்னும் இல்ல ராமு. ஒரு வாள் தேவை படுது. நீங்க தான் அழகா செய்வீங்களே அதனால உங்க கிட்ட செஞ்சு குடுக்க சொல்லி உதவி கேக்கலாம்னு பாத்தேன்.

ராமு: அட... வாள் தானே... சூப்பரா செஞ்சுடலாம். சரி உங்களுக்கு எவ்வளவு நீளமா இருக்கனும்

மைதிலி: சும்மா 2 அடி இருந்தா போதும்.

ராமு: ரொம்ப சின்னாதா இருக்காதா... சரி சரி... செஞ்சுடறேன். அப்புறம் கொஞ்சம் வளைஞ்ச மாதிரி இருக்கனும் இல்லியா?

மைதிலி: ஆமாம்.. ஆமாம்... கொஞ்சம் வளைஞ்சு இருந்தா தான் natural-ஆக இருக்கும்.

ராமு: சரி ஒகே மைதிலி. கொஞ்சம் வளைஞ்சு இருக்கற மாதிரியே செஞ்சுடறேன்.

மைதிலி: அப்புறம்... கொஞ்சம் Shining-ஆக இருக்கற மாதிரி பாத்துக்கோங்க

ராமு: எதுக்குங்க Shining-ஆக இருக்கனும்? சரி... ஒகே என்னால முடிஞ்ச வரைக்கும் நான் Shining ஆக்க பாக்குறேன்.

மைதிலி: மிரா கைல பிடிக்கற மாதிரி இருக்கற மாதிரி செஞ்சுக்கோங்க..

ராமு: எதுக்குங்க கைல பிடிக்கனும்... சரி ஓகே ஏதாவது ஏற்பாடு செஞ்சு பிடிக்கற மாதிரி செய்யுறேன்.

மைதிலி: அப்புறம் முக்கியமா வாளை இடுப்புல வெக்கறதுக்கு ஒரு உறை மாதிரி தைச்சு அதுக்குள்ள வைச்சுட்டு அப்புறம் மிரா மேடைக்கு போன உடனே எடுத்து வெளிய காட்டி “வந்தே மாதரம்” அப்படின்னு சொன்னா இன்னும் ரொம்ப நல்லா இருக்கும்.

ராமு: (ரொம்பவும் குழம்பி போனவராய்) என்னங்க மைதிலி... எனக்கு ஒன்னுமே புரியல... எதுக்குங்க உறைக்குள்ள வைக்கனும்?... எதுக்கு இடுப்புல கட்டனும்? அதெல்லாம் விட, எல்லாருக்கும் காட்டி எதுக்கு வந்தே மாதரம்ன்னு சொல்லனும்... எனக்கு தலையே சுத்துது...

மைதிலி: இதுல என்ன ராமு குழம்பறதுக்கு இருக்கு? ஜான்சி ராணி மேடை மேல ஏறி வீரமா வாளை காட்டி “வந்தே மாதரம்” அப்ப்டின்னு தானே சொல்வாங்க...

ராமு: ஐயய்யோ... இது ஜான்சி ராணியோட வாளா? இதை முன்னாடியே சொல்லி இருக்கலாம் இல்ல? நான் நீங்க “வாள்”-ன்னு சொன்னதும்... ஏதோ குரங்கோட “வால்”-ன்னு நினைச்சுட்டேன். ஜான்சி ராணின்னு நீங்க ஆரம்பத்துலயே சொல்லாதது தான் இவ்ளோ குழப்பம் ஆகிடுச்சு மைதிலி... Really really sorry... ஆனா நல்ல வேளை இப்பவாவது சொன்னீங்களே... இல்லன்னா நான் ஒரு Monkey வால் செஞ்சு கொண்டு வந்திருப்பேன்....

மைதிலி: (பொய்யான கோபத்துடன்) என்னது... குரங்கோட வாலா? உங்களை... உங்களை... நான் நேர்ல வந்து கவனிச்சுக்கறேன்.

(இருவரும் வயிறு வலிக்க வலிக்க சிரித்து முடித்தார்கள் - இப்ப மறுபடியும் ஒருமுறை இவங்களோட Conversation-ஐ ஆரம்பத்துல இருந்து படிச்சீங்கன்னா இவங்க ரெண்டு பேரும் எப்படி புரிஞ்சுகிட்டாங்கன்னு உங்களுக்கு தெரியும்)
ஒரு வழியாய் அந்த பொங்கல் விழாவும் வந்தது. உண்மையில் ராமு அந்த வாளை ரொம்ப அழகாக செஞ்சிருந்தாங்க. எல்லாரும் பாத்த உடனே ரொம்ப அழகா இருக்குன்னு பாராட்டினாங்க. ரொம்ப ரொம்ப நன்றி ராமு. மிராவும் ஜான்சி ராணி வேடத்தில் மிகவும் அழகாக இருந்தாள்.